No icon

வாழ்வு வளம் பெற – 6

 ‘நான் சரி, நீயும் சரி’

எதுக்குடா நீயெல்லாம் கல்யாணம் பண்ணின? தினமும் அவளை அடிச்சுத் துன்புறுத்திறியாமே! உண்மையாடா?”

அவ சரியே இல்ல, மாமா!”

வலி தாங்காம அவ அழறப்போ, நீ போய் தூண்ல உன் தலையை முட்டிக்கிறியாமே, இரத்தம் வரும் வரை!”

நான் சரியா இருந்தா எனக்கேன் இப்படிப்பட்ட பொண்ணு அமையறா?”

இது முதல் நிலை. இதுதான் மிகவும் ஆபத்தான நிலை. ‘நான் சரியில்லை, நீயும் சரியில்லைஎனும் வாழ்நிலை. இந்நிலையில் வாழ்வோர் மிகவும் ஆபத்தானவர்கள். நட்பு, காதல், திருமணம் என்று ஏதோ ஓர் உறவில் இவர்களிடம் மாட்டிக் கொண்டோர் எண்ணற்ற துன்பங்களைத் தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும்.

சிறிது தூரம் பயணித்து, இன்னோர் இடத்தில், இன்னொரு வீட்டில் நடப்பதைப் பார்ப்போம்.

இது மாமியார் வீடு. பையோடு வந்து நிற்கும் கணவனை ஆச்சரியத்தோடும், குழப்பத்தோடும் பார்த்துக் கேட்கிறாள் மனைவி: “என்னங்க, இப்படிப் பையோட வந்து நிக்கிறீங்க? ரெண்டு நாள்ல வந்துடறேன்னு வரும்போதே படிச்சுப் படிச்சு சொல்லிட்டுத்தானே வந்தேன்? ஸ்கூல் முடிஞ்சு வந்து நிப்பாளே நம்ம மக. இன்னிக்கு அவ எங்க தங்குவா?”

பக்கத்து வீட்ல சொல்லிட்டு வந்திருக்கேன்.”

பக்கத்து வீட்லயா? அவங்க என்ன நினைப்பாங்க? ஒரு ரெண்டு நாள் என்னை விட்டுப் பிரிஞ்சிருக்க முடியாதா?”

நீயில்லாம...”

கல்யாணமாகி இத்தனை வருஷம் ஆன பிறகும்... அய்யோ! உங்களைப் பத்தி எங்க அப்பாவும், அம்மாவும் என்ன நினைப்பாங்க? சிரிக்க மாட்டாங்களா?”

இது இரண்டாம் நிலை. ‘நான் சரியில்லை; ஆனால், நீ சரியானவள்என்பதே இந்த இரண்டாம் வாழ்நிலை. ‘நான் சரியில்லைஎன்று இவர்கள் நம்புவதால், தன்னிலேயே இவர்களுக்கு மகிழ்வும், நிறைவும் கிடைக்க வாய்ப்பில்லை. சரியானவர் என்று இவர்கள் கருதும் ஒரு நபர் மட்டுமே இவர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியும். எனவே, அத்தகைய நபரோடு சங்கிலி போட்டுத் தங்களைப் பிணைத்துக்கொள்ளப் பார்ப்பார்கள். அந்தச் சங்கிலி அடுத்தவருக்கு எத்துணை சிரமமாக இருந்தாலும், இவர்களுக்கு வேறு வழியில்லை. அவர் பிரிந்தாலோ, இறந்தாலோ இவர்கள் எதுவும் இல்லாதவர்களாக ஆகி விடுவார்கள்.

மூன்றாம் நிலைக்கான காட்சி அரங்கேறும் வீட்டிற்குச் செல்வோமா?

சமையலறைக்கு வெளியில் நின்று, உள்ளே வெப்பத்தோடும், புகையோடும் போராடும் மனைவியைப் பார்த்துக் கத்துகிறான் கணவன்: “ஏண்டி இவ்வளவு நேரம்? சமைக்கிறியா? இல்ல செல்ஃபோனைக் கிச்சனுக்குள்ள எடுத்துட்டுப் போய் உங்கப்பன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கியா?”

அவ்வளவுதாங்க. முடிஞ்சிருச்சு. நீங்க போய் உக்காருங்க. நான் எடுத்துட்டு வரேன்.”

வியர்வையைத் துடைத்துக் கொண்டே அவள் அமைதியாய்ப் பரிமாறுகிறாள்.

பார்ப்போம். என்னிக்குத்தான் எனக்குப் பிடிச்ச மாதிரி சமைக்கப் போறன்னு பார்ப்போம்.”

சாப்பிட்டு முடிந்ததும் கை கழுவி, தன் அறைக்குள்ளே செல்பவன், உடுத்திக் கொண்டு கிளம்புகிறான். உழைத்துச் சமைத்துத் தனக்கு உணவிடும் அவள் சாப்பிட்டாளா? எல்லாம் இருந்ததா? என்று அவன் ஒருநாளும் கேட்டதே இல்லை.

நான் சரி. ஆனால், நீ சரியில்லைஎன்ற மூன்றாம் வாழ்நிலையில் இருப்பவர்கள் ஆணவக்காரர்களாக, கோபக்காரர்களாக இருப்பர். ‘நான் சரிஎன்பதால் ஆணவம். ‘நீ சரியில்லைஎன்பதால் தீராக் கோபம். இவர்களிடம் உறவுகளில் சிக்கிக் கொள்பவர்களை இந்த இரண்டும் சேர்ந்து என்ன பாடுபடுத்தும் என்று எண்ணிப் பாருங்கள்!

நான்காம் நிலையைப் புரிந்துகொள்ள இரண்டு காட்சிகளைப் பார்ப்போம். முதல் காட்சிக்காக நாம் பின்னே நகர்ந்து, கடந்த காலத்திற்குள் பயணிக்க வேண்டும்

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகருக்கு அருகிலிருந்த ஆகாகான் அரண்மனை. ‘வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தை மும்பை நகரில் துவக்கி வைத்துப் பேசி முடித்ததும், காந்திஜியை ஆங்கிலேயர்கள் கைது செய்தார்கள். ‘கணவனைக் கைது செய்து விட்டால் போராட்டம் நின்று விடுமா? நான் பேசுகிறேன்என்று மேடையேறிப் பேசிய மகாத்மாவின் மனைவி கஸ்தூரி பாயையும் கைது செய்து, இரயிலில் புனே நகருக்குக் கொண்டு வந்து இந்த அரண்மனையில்  இருவரையும் வீட்டுச் சிறையில் வைத்தார்கள்.

சிறை வைத்த சில மாதங்களிலேயே கஸ்தூரி பாயின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அன்று 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள், மாலை மணி ஏறத்தாழ 7.30 இருக்கும். தனக்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கஸ்தூரி பாய், தன் கணவர் இருந்த அறைக்குத் தன்னை எடுத்துச் செல்லுமாறு கேட்டார். காந்திஜியிடம் அவர் மடியில் தலை சாய்க்க அனுமதி கேட்டார். சிறிது நேரத்தில் கணவரின் மடியில் தலை சாய்த்துப் படுத்த வண்ணம் உயிர் துறந்தார். மறுநாள் இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு, தன் துயரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு காந்திஜி சொன்னார்: “அவள் என்னை விட உயர்ந்தவளாகவே இருந்தாள். அவள் இல்லை என்றால் நான் பாதாளத்தில் வீழ்ந்திருப்பேன்.”

இதே நான்காம் நிலைக்கான இன்னொரு காட்சி நிகழ்காலத்தைச் சார்ந்தது. எழுத்தாளர் ஜெய மோகனைத் தெரியுமல்லவா? இந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள் அவரின் திருமண நாள். இப்போது 53 வயதாகும் தன் அன்பு மனைவி அருண் மொழியைப் பற்றி தன் வலைப்பதிவில் இப்படி எழுதுகிறார்: “இக்காலக்கட்டத்தின் மகிழ்ச்சிக்காக அவளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என் அலைக்கழிவின் நாள்களில் பெரும் கனிவுடன் என் வாழ்க்கைக்குள் நுழைந்து, என்னை அரவணைத்துக் கொண்டாள். எனக்கென ஒரு நல்ல குடும்பத்தை அமைத்தாள். என் எல்லா அகப் புறப் பயணங்களிலும் துணை என்றானாள். இன்று அன்னைக்கு நிகரான ஆதரவுடன் என் அருகே அமர்ந்திருக்கிறாள்.”

நான்காம் நிலை என்னவென்று புரிகிறதல்லவா? ‘நானும் சரி, நீயும் சரிஎன்பதே இந்நிலை. எதுவுமே இல்லாமல் எல்லாவற்றிற்கும் தாயை, தந்தையைச் சார்ந்திருக்கிற குழந்தைப் பருவத்தில் நாம் அனைவருமேநான் சரியில்லை, நீ சரிஎன்ற நிலையில் தான் தொடங்குகின்றோம். அங்கு தொடங்கி, வந்து சேர வேண்டியது இந்த நான்காம் நிலை. ஆனால், இது தானாய், எளிதாய் நடப்பதில்லை. எல்லாம் சரியாய் நடந்து, உடலுக்கும், உள்ளத்துக்கும் தேவையானதெல்லாம் போதுமான அளவு கிடைத்து, பலவற்றைச் சிந்தித்துப் புரிந்து, தாண்டி வந்தால் மட்டுமே இந்த நிலையை நாம் வந்தடைய முடியும்.

வந்து விட்டால் நம் வாழ்க்கை வளமாகும். இருவருக்கும் நிறைவு தரும். அன்பார்ந்த உறவுகள் செழித்து ஒவ்வொரு நாளும் இனிதாகும்.

Comment